கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் இடம்பெற்ற தங்கத் தகடு மற்றும் தங்கக் கவசத் திருட்டு விவகாரத்தில், சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சபரிமலை ஆலயத்தின் துவார பாலகர் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கக் கவசம் மற்றும் கதவு நிலைகளில் இருந்த தங்கத் தகடுகள் திருடப்பட்டமை தொடர்பாகக் கேரளா காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் ஏற்கனவே திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையின் அடுத்தகட்டமாக நேற்று (19.12.2025) மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்:
சிலைகளுக்குத் தங்க முலாம் பூசும் பணியை மேற்கொண்ட சென்னையைச் சேர்ந்த பிரபல நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO).
திருடப்பட்ட தங்கத்தை வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கர்நாடக மாநிலம், பெல்லாரியைச் சேர்ந்த தங்க ஆபரணக் கடை உரிமையாளர். கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காகத் திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, அங்கு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
இத்திருட்டு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) தனியாக நிதி மோசடி விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்தத் தனிப்பட்ட விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நேற்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சபரிமலை போன்ற புனிதத் தலத்தில் இடம்பெற்ற இந்தத் தங்கத் திருட்டுச் சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.