ரஷ்ய ஆயுதப்படைகளின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov), கார் குண்டு வெடிப்பு ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வரோவ் பயணித்த காரின் அடியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு, அவர் வாகனத்தைச் செலுத்திச் சென்றபோது பயங்கரச் சத்தத்துடன் வெடித்துள்ளது. இவர் ரஷ்ய ஆயுதப்படைகளின் நடவடிக்கைப் பயிற்சிப் பிரிவின் (Operational Training Division) தலைவராகப் பணியாற்றி வந்தார்.
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் தெற்குப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் புலனாய்வுப் பிரிவினரின் (GUR) ஈடுபாடு இருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இது குறித்து ரஷ்ய அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விசேட விசாரணை அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து உக்ரைன் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ கருத்துக்களும் வெளியிடப்படவில்லை. உக்ரைன் – ரஷ்ய போர் சூழலுக்கு மத்தியில், ரஷ்யாவின் முக்கிய இராணுவ அதிகாரிகள் குறிவைத்துத் தாக்கப்படுவது இது முதன்முறையல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

