தேசிய மாநாட்டை நடத்தி கட்சியை மீண்டும் எழுச்சிபெறச் செய்ய அனைவரும் தயாராக வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். யாழ். தலைமையகத்தில் இன்று (25) நடைபெற்ற கட்சிச் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மாற்றம் வேண்டி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகள் இன்னும் நிறைவேறவில்லை. இருப்பினும், சவாலான சூழலில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசாங்கத்திற்கு இன்னும் கால அவகாசம் வழங்குவதே நியாயமான நிலைப்பாடாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
எந்த அரசும் தமிழ் மக்களுக்கு எதையும் தாம்பாளத் தட்டில் ஏந்தி வந்து தரப்போவதில்லை. கடந்த காலங்களில் நாம் ஆட்சியில் பங்கெடுத்தமையே பேச்சுவார்த்தைக்கான தளமாக அமைந்தது. இப்போது ஆளும் கட்சியில் உள்ள தமிழ் எம்.பிக்கள் அரசிடம் பேசிப் பெறும் ஆற்றல் இன்றி அரசுக்குள் கரைந்து போயுள்ளனர் எனச் சாடினார்.
அண்மையில் இடம்பெற்ற தனது கைது மற்றும் கட்சி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைகளை எதிர்காலம் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் என்றும் அவர் உறுதியளித்தார்.
கட்சியின் பலவீனங்களை அடையாளங்கண்டு சீர்செய்வதற்காக விரைவில் தேசிய மாநாடு நடத்தப்படவுள்ளது. இதன் மூலம் கட்சி கட்டமைப்புகளைச் சீராக்கி, மீண்டும் ஒரு அரசியல் பலத்தைப் பெற்று, அரசாங்கத்துடன் பேசித் தீர்வு காண்பதற்கான அதிகாரத்தை மக்கள் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

