யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

24 1

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான ஊடகன்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட போதே ரவூப் ஹக்கீம் இந்த கோரிக்கையை முன்வைத்தார். கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார். யுத்த காலத்திலும் அதன் பின்னரும் தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட கொலைகள், காணாமலாக்கப்படுதல்கள் மற்றும் அடக்குமுறைகள் குறித்து இதுவரை உரிய நீதி விசாரணை நடத்தப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான கொடூரங்களுக்கு காரணமானவர்கள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்று குறிப்பிட்ட ஹக்கீம், சுயாதீனமான மற்றும் நேர்மையான புலனாய்வுகள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். “இவ்வாறான அனைத்து சம்பவங்களையும் விசாரிக்க தனியான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும். அதன் மூலம் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்துக்கு வர வாய்ப்புள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

படைத் தரப்பிலும் புலனாய்வு பிரிவுகளிலும் இருந்த சிலர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தற்போது தகவல்கள் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளதாகவும், எனவே முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சிறுபான்மையினரின் கட்சிகள் ஒன்றிணைந்து இத்தகைய விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க வலியுறுத்த வேண்டும் என்றும் ரவூப் ஹக்கீம் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு நீண்டகாலமாக சவாலுக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், ரவூப் ஹக்கீமின் இந்தக் கோரிக்கை நீதிக்கான போராட்டத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் ஊடக ஆர்வலர்கள் இந்த கோரிக்கையை நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

Exit mobile version