முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டன் சென்றபோது அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு விசாரணைகள், தற்போது மன்றாடியார் நாயகம் (Solicitor General) விராஜ் தயாரத்னவின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
லண்டனில் உள்ள வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் (University of Wolverhampton) தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க லண்டன் சென்றிருந்தார். இந்தப் பயணத்திற்காக 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை அவர் முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சட்ட மா அதிபர் (Attorney General) வழங்கிய அனுமதியின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மன்றாடியார் நாயகம் விராஜ் தயாரத்ன இந்த விசாரணைகளை நேரடியாகக் கண்காணிக்கவுள்ளார். மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் இந்த வழக்கை நெறிப்படுத்தி வருகின்றார்.
லண்டனுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் சேகரித்த முக்கிய ஆவணங்கள், இன்னும் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
முன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் மீதான நிதி மோசடி வழக்கு இவ்வளவு உயர்மட்டக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பது, இலங்கையின் நீதித்துறையில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. லண்டனில் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன் இந்த வழக்கில் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.