அடுத்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மாகாண சபைத் தேர்தல்களைக் காலவரையின்றிப் பிற்போடுவதற்கு அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் வெளியான தகவல்களின்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்து ஜனவரி மாதம் ஜனாதிபதி அநுரவால் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
மேலும், மாகாண சபைத் தேர்தல்களை மூலோபாய ரீதியான இலக்காகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை முன்வைக்க அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான கே.டி. லால்காந்தவும் கூட, அடுத்த ஆண்டு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தார்.
இருப்பினும், கடந்த வாரம் ஜே.வி.பிக்குள் (NPP) நடைபெற்ற விரிவான பல சுற்று கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, மாகாண சபைத் தேர்தல்களைக் காலவரையின்றிப் பிற்போடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கலந்துரையாடல்களின் போது, மாகாண சபை முறைமை, வடக்கு, கிழக்குக்கான அரசியல்தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வுப் பொறிமுறை குறித்த ஜே.வி.பி.யின் நிலைப்பாடு ஆகியவை ஆழமாக ஆராயப்பட்டன.
இந்த முக்கியமான விடயங்களில் இறுதி முடிவு எட்டப்படும் வரை தேர்தலை ஒத்திவைக்க யோசனை முன்வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.