மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பதிலளிக்கும் போதே பிரதமர் பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டார்.
நீண்டகாலமாகத் தாமதமடைந்துள்ள மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும். இதற்கான அவசியமான நடவடிக்கைகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.
“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற கொள்கைப் பிரகடனத்தின்படி, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும். அதற்குப் பதிலாகப் பாராளுமன்ற ஆட்சி முறைமையை (Parliamentary System) நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு புதிய அரசியலமைப்பைக் கொண்டுவராமல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக ஒழிக்க முடியாது என்பதால், அது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் இந்த நகர்வுகள் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

