தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும் முழுமையான குடியுரிமைச் சலுகைகளை வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் எஸ். ராமதாஸ் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
1983இல் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து, சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்ந்தனர். இன்று, சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள 116 ஏதிலிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.
பல தசாப்தங்களாக இந்தியாவில் வாழ்ந்தும், இந்தியாவிலேயே பிறந்து, கல்வி கற்ற இளைய தலைமுறையினர் கூட அடிப்படை உரிமைகளைப் பெற முடியாமல் உள்ளனர்.
பலர் பாடசாலை மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தாலும், சட்டங்கள் அவர்களை அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கத் தடுக்கின்றன. பெரும்பாலானோர் மிகக் குறைந்த கூலிக்குத் தினக்கூலிகளாகவே வேலை செய்கின்றனர்.
இந்தியக் குடிமக்களுக்குக் கிடைக்கும் பல நலத் திட்டப் பயன்களிலிருந்தும் இவர்கள் விலக்கப்படுகிறார்கள். “நேபாளம் மற்றும் பூட்டானில் இருந்து வந்த ஏதிலிகள் கூட அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும்போது, நம்முடைய தமிழ் சகோதரர்களுக்கு அத்தகைய வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது,” என்று ராமதாஸ் சுட்டிக் காட்டினார்.
குடும்பங்கள் விரிவடையும்போது, பல தசாப்தங்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட அதே சிறிய பகுதிகளில் கண்ணியத்துடன் தொடர்ந்து வாழ முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கனடா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கியுள்ள நிலையில், இந்தியா ஐக்கிய நாடுகள் சபையின் ஏதிலிகள் மாநாட்டில் கையெழுத்திடாததால், இங்குள்ள ஏதிலிகளுக்கு ஐ.நா. ஆதரவை நீட்டிக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தீவிரமான வாக்காளர் பதிவுப் பணியை, ஈழத் தமிழர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்கும்போதுதான், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவர்களின் நலனுக்காகச் செயல்படுவார்கள் என்றும், இந்தத் தமிழர்கள் இந்தியாவின் உரிமையுள்ள குடிமக்களாக, கண்ணியத்துடனும் சுதந்திரத்துடனும் வாழ மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.