யாழ். மாவட்டத்தில் 2019-ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுகளை உடனடியாக வழங்கக் கோரி, வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (19) செவ்வாய்க்கிழமை பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
2019-ஆம் ஆண்டு தற்போதைய ஆளுநர் என். வேதநாயகன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் இந்த வீட்டுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், பல வருடங்கள் கடந்தும் அவற்றுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.
கொடுப்பனவுகள் கிடைக்காததால் வீடுகள் அரைகுறையாக நின்றுவிட்டன. இதனால் மழைக்காலங்களில் இருக்க இடமின்றிப் பயனாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது மனவேதனையை வெளிப்படுத்தினர்.”தற்போதைய அரசாங்கம் பாரபட்சமற்றது எனக் கூறினாலும், பழைய திட்டங்களை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டுப் புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது எமக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.”
இத்திட்டத்தை ஆரம்பித்த அதிகாரியே தற்போது ஆளுநராக இருக்கும் நிலையில், அவர் இது குறித்து மௌனம் காப்பது ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்தனர். “யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி வீதியில் நடந்து திரிகிறார். ஆனால், அரைகுறை வீடுகளில் அல்லல்படும் எங்களைச் சந்திக்க அவருக்கு நேரமில்லை” எனச் சாடினர்.
தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆளுநர் அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் கையளித்தனர். இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்படாவிட்டால், தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

