தையிட்டியில் நாளை பாரிய போராட்டம்: சட்டவிரோத விகாரை என அறிவிப்புப் பலகை நடவும் தீர்மானம்!

images 2 6

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை அடாத்தாகக் கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராகவும், அதன் விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவப் பதவிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாளை (21) ஞாயிற்றுக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் இணைந்து இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். நாளை காலை 09:00 மணியளவில் விகாரைக்கு முன்பாக இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

விகாரைக்காக அடாத்தாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

விகாரையின் விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரருக்கு, ‘வட இலங்கை துணை தலைமைச் சங்கநாயக’ பதவி வழங்கும் விழா நாளை நடைபெறவுள்ளது. புத்தசாசன மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தலைமையில் நடைபெறவுள்ள இந்த கௌரவிப்பு நிகழ்வுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (18) நடைபெற்ற வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) முழுமையான ஆதரவுடன் ஒரு முக்கிய பிரேரணை நிறைவேற்றப்பட்டது. தையிட்டி விகாரைக்கு முன்பாக “இது ஒரு சட்டவிரோதமான விகாரை” எனத் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அறிவித்தல் பலகை நாட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விகாரை விவகாரம் தொடர்பாகத் தையிட்டி பகுதியில் நீண்டகாலமாகப் பதற்றம் நிலவி வரும் சூழலில், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காணி உரிமையாளர்கள் இணைந்து முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

 

Exit mobile version