உத்தேச புதிய மின்சாரக் கொள்கையின் ஊடாக, வீதி விளக்குகளுக்கான செலவை அந்தந்தப் பகுதி மக்களிடமே அறவிடுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மின் பாவனையாளர் சங்கம் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.
மின் பாவனையாளர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக இது குறித்து விளக்குகையில், ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள வீதி விளக்குகளின் மொத்த மின் நுகர்வு (Wattage) கணக்கிடப்பட்டு, அந்தத் தொகை அப்பகுதியில் வசிக்கும் மக்களின் மின்சாரப் பட்டியலுடன் (Bill) இணைக்கப்படும்.
இவ்வாறு அறவிடப்படும் தொகையானது, ஒரு பாவனையாளரின் மொத்த மின்சாரக் கட்டணப் பெறுமதியில் 2.2 சதவீதத்திற்கு (2.2%) மிகாதவாறு இருக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போது வீதி விளக்குகளைப் பராமரிக்கும் பொறுப்பு பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளிடமே உள்ளது. எனினும், புதிய கொள்கையின்படி உள்ளூராட்சி மன்றங்களிடமிருந்து இந்த அதிகாரம் பறிக்கப்படும், வீதி விளக்குகளை நிர்வகிக்கவும் பராமரிக்கவும் தனியானதொரு புதிய நிறுவனம் உருவாக்கப்படும்.
ஏற்கனவே மின்சாரக் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, வீதி விளக்குகளுக்கான மேலதிக சுமையைச் சுமத்துவது அநீதியானது என மின் பாவனையாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கு மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்தே இச்செலவுகள் ஈடுசெய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.