பத்தாவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் விசேட கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று முன்தினம் (07) நடைபெற்றது. இதில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சிவிலியன் விவகாரங்கள் குறித்த பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்தல், மூடப்பட்டுள்ள வீதிகளைத் திறத்தல் மற்றும் பாடசாலைகளின் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவருவது குறித்து சாதகமான தீர்வுகளை வழங்க இணக்கம் காணப்பட்டது. இதில் உள்ள நடைமுறைத் தடைகளை நீக்கத் துரித நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
திருகோணமலை ‘சாண்டி பே’ (Sandy Bay): மனையாவெளி பகுதியில் உள்ள கடற்கரையைப் பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றிப் பயன்படுத்துவதற்கும், அப்பகுதி மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
ஒலுவில் துறைமுகத்தைச் சுற்றியுள்ள மண்ணரிப்புத் தடுப்பு மற்றும் துறைமுகத்தின் எதிர்காலப் பயன்பாடு குறித்து நாரா (NARA) நிறுவனத்தின் உதவியுடன் புதிய சாத்தியக்கூறு ஆய்வை (Feasibility Study) மேற்கொள்ளக் கடற்றொழில் அமைச்சிற்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
விமானப்படையின் ஹெலிகொப்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கையிலிருந்து அதிகப்படியான பாதுகாப்புப் படை உறுப்பினர்களை அனுப்புவது குறித்து ஆராயப்பட்டது.
பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் நலன்புரித் திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

