போதைப்பொருள் ஒழிப்புப் பணியிலிருந்து அரசாங்கம் திசை திருப்பப்படாது என்றும், எதிர்க்கட்சிகளின் முயற்சிகளால் அதை ஒருபோதும் தடுக்க முடியாது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தங்காலையில் “முழு நாடுமே ஒன்றாக” (The whole country together) என்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்புச் செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்து கருத்துரைத்த போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
மிகவும் சவாலான இந்த வேலையைத் தொடருமாறு பாதுகாப்புப் படைகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தின் முழு ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
நாட்டின் போதைப்பொருள் நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்ட இந்த “முழு நாடுமே ஒன்றாக” தேசிய முன்முயற்சி, ஜனாதிபதியின் அனுசரணையில் தங்காலை பொது மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
9 மாகாணங்களிலும் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், தீங்கு விளைவிக்கும் போதைப்பொருள் பரவல் மற்றும் கடத்தலை ஒழிப்பதில் கவனம் செலுத்துகிறது.
இதில் குறிப்பாக நாட்டின் இளைஞர்களைப் பாதுகாப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

