நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ள அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க இன்று (17) நாடாளுமன்றத்தில் இந்த முக்கிய தகவலை வெளியிட்டார்.
தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள சவாலான பொருளாதார மற்றும் எரிசக்தி சூழ்நிலைகளை அரசாங்கம் எப்படிக் கையாண்டு வருகின்றது என்பது குறித்த விரிவான விளக்கத்தை ஜனாதிபதி தனது உரையில் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (17 ஆம் திகதி) இரவு 7:30 மணிக்கு ஊடகங்கள் வாயிலாக நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாகவும் சபை முதல்வர் தெரிவித்தார். வாராந்த விடுமுறை அறிவிப்புகள், எரிபொருள் கையிருப்பு தொடர்பான அமைச்சர்களின் விளக்கங்களைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் இந்த உரை மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு பதற்றங்கள் மற்றும் உலகளாவிய எரிபொருள் விலையேற்றம் இலங்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து ஜனாதிபதி இன்றைய உரையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.