கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் நிபுணர்களை உள்ளடக்கிய முறையான சட்டக் கட்டமைப்புடன் கூடிய பொறிமுறையை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
தேசிய கல்வி நிறுவகத்தை அடிப்படையாகக் கொண்டு கல்வி மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து விரிவுரையாளர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.
புதிய கல்வி மறுசீரமைப்புகள் நகர்ப்புற மாணவர்களை விட, கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கு மிக அவசியமானவை என்பதை விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டினர்.
பல்கலைக்கழக கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான சட்டத் திருத்தங்கள் மற்றும் விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய கோரிக்கைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.
பல்கலைக்கழகக் கல்வி மற்றும் அதன் சுதந்திரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்கும் என ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில்:
“பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி ஊடாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருகின்றது. இந்தச் தேசியப் பணிக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.”
கல்விச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்த அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவை வரவேற்றுள்ள விரிவுரையாளர்கள், அதற்கான தமது முழுமையான ஆதரவை வழங்கவும் முன்வந்துள்ளனர்.