யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (16) நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
ஜனாதிபதி விகாரையில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டதுடன், விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்கவை நேரில் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
அண்மைக்காலமாக வடக்கு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காங்கேசன்துறை, தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்திருக்கும் காணி தொடர்பான சிக்கல்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சந்திப்பின் போது, தையிட்டி விகாரை தொடர்பாக விகாராதிபதி ஏற்கனவே முன்வைத்திருந்த முக்கிய கருத்தை மீளவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தையிட்டி விகாரை தற்போது அமைந்திருக்கும் இடமானது பொதுமக்களுக்குச் சொந்தமான காணி என்றும், அப்பகுதியில் விகாரைக்கு எனத் தனியான காணி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விகாரைக்குரிய மூலக் காணியில் அதனை நிர்மாணிப்பதே சிறந்தது என்றும், பொதுமக்களின் காணிகளில் விகாரை கட்டப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்வதற்கில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாவகச்சேரி வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை முன்றலில் இன்று காலை தேசிய வீடமைப்புத் திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.
யாழ். தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தேசிய மாநாட்டிலும் அவர் கலந்துகொண்டார்.