நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, பல்வேறு துறைகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்களை வெளியிட்டார்.
2025-ஆம் ஆண்டின் பொருளாதார வெற்றிகளைத் தொடர்ந்து, எதிர்வரும் காலப்பகுதியில் 75,000 புதிய பணியாளர்கள் இணைக்கப்படுவர்.பொலிஸ் சேவைக்கு புதிதாக 10,000 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதுடன், இராணுவத்திற்கும் புதிய ஆட்சேர்ப்புக்கள் முன்னெடுக்கப்படும்.
வடக்கில் தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகளின் தட்டுப்பாட்டை நீக்கும் வகையில், பொதுமக்கள் தங்களது மொழியிலேயே சேவைகளைப் பெற்றுக்கொள்ள ஏதுவாக தமிழ் மொழி பேசும் பொலிஸ் அதிகாரிகளை அதிகளவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆட்சேர்ப்பு விபரங்களைப் பகிர்ந்து கொண்ட அதேவேளை, தற்போது பணியிலுள்ள சில அரச அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கவலை வெளியிட்டுள்ளார்:
நாடு முழுவதும் பரவியுள்ள போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிரமாக உழைத்து வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, சில அரச அதிகாரிகளே இத்தகைய சட்டவிரோதச் செயல்களுக்குத் துணை போவது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
2025-ஆம் ஆண்டு இலங்கைக்கு ஒரு வெற்றிகரமான ஆண்டாக அமைந்ததைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புதிய ஆட்சேர்ப்புக்கள் மூலம் அரச சேவையின் வினைத்திறனை அதிகரித்து, ஊழலற்ற மற்றும் மக்கள் நலன் சார்ந்த நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதே தமது இலக்கு எனத் தெரிவித்தார்.