மத்தள சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், அங்கிருந்து வெளியேறும் பயணிகளுக்கான புறப்பாட்டு வரியை நீக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீர்மானித்துள்ளார்.
மத்தள சர்வதேச விமான நிலையத்தினூடாக வெளிநாடு செல்லும் பயணிகளிடம் இதுவரை அறவிடப்பட்டு வந்த 60 அமெரிக்க டொலர் புறப்பாட்டு வரி நாளை முதல் இரத்து செய்யப்படுகிறது.
மத்தள விமான நிலையம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முற்றாகத் தனியார் மயமாக்கப்படமாட்டாது என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அரசு – தனியார் பங்களிப்பு (PPP): விமான நிலையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த அரசு – தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, விருப்பம் கோரல்கள் (EOI) அழைக்கப்படவுள்ளன.
இந்தத் தீர்மானத்தின் மூலம் மத்தள விமான நிலையத்தின் ஊடாகப் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும், விமான நிலையத்தின் வர்த்தக நடவடிக்கைகள் வலுப்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை மூன்று நிறுவனங்கள் இதனுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.