மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து பிற்போடுவதற்கான நழுவல் போக்கினையே ஜனாதிபதி முன்னெடுக்கிறார் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (நவ 7) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரை தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மாகாண சபைத் தேர்தல் பற்றி ஜனாதிபதி பல விடயங்களைக் குறிப்பிட்டார். மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் ஜனாதிபதி நழுவல் போக்கினையே கடைப்பிடிக்கிறார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
2026ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் மக்கள் எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. கடந்த அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளையே இந்த அரசாங்கம் கடைப்பிடிக்கிறது. பெரியதொரு மாற்றம் ஏதும் இல்லை.