பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியான மிண்டானாவோ (Mindanao) தீவில் இன்று (07) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 மெக்னியூட் ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
சூரிகாவோ டெல் சுர் (Surigao del Sur) மாகாணத்தில் உள்ள பாகுலின் (Baculin) கிராமத்திலிருந்து சுமார் 68 கிலோமீட்டர் கிழக்கே கடற்பரப்பில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இது பூமியின் அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நில அதிர்வு ஆய்வு மையம் (Phivolcs) இந்த நிலநடுக்கத்தை 6.4 மெக்னியூட் என அளவிட்டுள்ளதுடன், இது சுமார் 23 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். எனினும், இதுவரை பாரிய உயிர்ச்சேதங்களோ அல்லது கட்டிடச் சிதைவுகளோ ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் வெளியாகவில்லை.
நிலநடுக்கம் கடற்பரப்பில் ஏற்பட்ட போதிலும், அதன் ஆழம் மற்றும் தன்மையைக் கருத்திற்கொண்டு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதங்கள் மற்றும் பின்னதிர்வுகள் (Aftershocks) ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்த நிலையில், இன்றைய நிலநடுக்கம் அப்பகுதி மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

