வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு ஒத்திவைப்பு!!

image f86a449e80

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு கோரம் இல்லாததால் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது.

இன்றைய அமர்வு கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றிருந்தது.

சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் மூவரும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் இருவரும் என ஐவர் மட்டுமே அமர்வில் பங்கேற்றனர். அதனால் அமர்வு சுமார் 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அமர்வு ஆரம்பிக்கப்பட்டதும் கோரம் காணாததால் திகதி குறிப்பிடப்படாமல் தலைவர் தெரிவு அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

வல்வெட்டித்துறை நகர சபை தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே புதிய தலைவர் தெரிவு இடம்பெறவிருந்தது.

வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. சுயேட்சைக் குழு 4 உறுப்பினர்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி. என்பவை தலா 2 உறுப்பினர்களையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவை தலா ஒரு உறுப்பினர்களையும் கொண்டுள்ளன.

Exit mobile version