உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த போர் நிறுத்தக் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்துள்ளது.
உலக அமைதியை வலியுறுத்தியும், உயிரிழப்புகளைத் தவிர்க்கும் நோக்கோடும், கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒரு நாள் மட்டும் போரை நிறுத்தி வைக்குமாறு பாப்பரசர் கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், ரஷ்யத் தரப்பு இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
இது குறித்துத் தனது வேதனையைப் பகிர்ந்துள்ள பாப்பரசர் 14-வது லியோ “கடவுளின் பிறந்த நாளில் குறைந்தபட்சம் ஒரு நாளாவது சமாதானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை ரஷ்யா நிராகரித்திருப்பது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. இருப்பினும், நல்லெண்ணம் கொண்ட அனைவரும் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். உலகம் முழுவதும் 24 மணிநேரமாவது சமாதானம் நிலவும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது.”
உக்ரைன் – ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ள சூழலில், பாப்பரசரின் இந்த அமைதித் தூது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றிருந்த போதிலும், ரஷ்யாவின் இந்த முடிவு கத்தோலிக்கத் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.