முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றின் ஓய்வுபெற்ற அதிபருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாரிய நிதி முறைகேடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் செயலகம் கல்வி அமைச்சுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளது.
குறித்த அதிபர் தனது பதவிக்காலத்தில் அரச சட்டதிட்டங்களை மீறிச் செயற்பட்டதாகப் பிரதமர் அலுவலகத்திற்குப் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில், அவரது ஓய்வூதியத்தை (Pension) தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகளுக்கான விதிமுறைகளை மீறி, சமூக ஊடகங்கள் வாயிலாகத் தனிப்பட்ட ரீதியில் நிதி திரட்டியமை.
பாடசாலை நிர்வாகத்துடன் நேரடித் தொடர்பில்லாத, ஆனால் பாடசாலையின் பெயரில் இயங்கும் ஒரு நிதியத்திற்குப் பணம் வழங்குமாறு கோரி உத்தியோகபூர்வக் கடிதங்களை அனுப்பியமை.
பிரதமர் செயலகத்தின் மூத்த உதவிச் செயலாளர் T. ஸ்ரீமன்ன, இது தொடர்பான முறைப்பாட்டை 2025.12.12 ஆம் திகதியிட்ட கடிதம் மூலம் கல்வி அமைச்சுக்குப் பாரப்படுத்தியுள்ளார். குறித்த அதிபர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரச ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னரும், அவர்கள் பதவியில் இருந்த காலத்தில் மேற்கொண்ட ஊழல்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களது ஓய்வூதியப் பலன்களைப் பாதிக்கும் சட்ட நடைமுறைகளின் கீழ் இந்த விவகாரம் கையாளப்படவுள்ளது.