தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) கூட்டணி நிலைப்பாடு குறித்த அரசியல் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
அன்புமணி ராமதாஸ் தலைமையில் பா.ம.க ஏற்கனவே அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை மறுத்துள்ள அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “அன்புமணி அமைத்த கூட்டணி செல்லாது; சட்டரீதியாகவும் செல்லாது; என்னுடன் அமையும் கூட்டணிதான் வெற்றி பெறும்” எனத் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
தி.மு.க-வுக்கு ஆதரவா? சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது; தைலாபுரத்திலிருந்து தைலமும் சென்றுவிட்டது” எனக் கூறியது, அவர் தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதையே சூசகமாக உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
த.வெ.க-வுடன் பேச்சுவார்த்தை? நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முக்கிய நிர்வாகிகள், ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன் மூலமாகப் பா.ம.க-வுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கூட்டணி குறித்த இழுபறி நீடித்து வரும் நிலையில், டாக்டர் ராமதாஸ் இன்று (11) மாலை 4.30 மணியளவில் தைலாபுரத்திலிருந்து சென்னைக்குப் புறப்படுகிறார். சென்னையில் முக்கிய அரசியல் தலைவர்களுடன் இறுதிச்சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முடித்த பின்னர், நாளை காலை தனது அதிகாரப்பூர்வ கூட்டணி முடிவைத் தைலாபுரத்தில் அல்லது சென்னையில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

