பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு: கம்பனிகளின் புறக்கணிப்பால் குழப்பம்!

Estate

tea pluckers on the Pedro Estate, Nuwara Eliya, Southern Highlands, Sri Lanka

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான சம்பள நிர்ணய சபை கூட்டம் நேற்று (அக்டோபர் 18) நடைபெற்றது. மேலதிக தொழில் ஆணையாளர் நாயகம் எச்.ஜி.எப். குணவர்தனவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு இணங்க, கொழும்பு, நாரஹேன்பிட்டவிலுள்ள தொழில் திணைக்களத்தில் பிற்பகல் 2 மணிமுதல் சுமார் ஒரு மணிநேரம் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

ஆச்சரியம் அளிக்கும் விதமாக, இந்தக் கூட்டத்தில் பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை. கம்பனிகள் முதற்கட்ட கூட்டங்களைப் புறக்கணிப்பது வழமையாக இருந்தாலும், இம்முறை, தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் தரப்பிலும் ஒருவர் கலந்துகொள்ளவில்லை. மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதியும் தற்போதைய பதுளை மாவட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கிட்ணன் செல்வராஜ் பதுளையில் இருப்பதாகக் கூறி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

சம்பள நிர்ணய சபையைக் கூட்டுவதற்கு இரு தரப்பிலும் ஆகக் குறைந்தது இரு பிரதிநிதிகளாவது பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கை நிலவுகிறது. ஆனால், கம்பனிகள் சார்பில் ஒரு பிரதிநிதி கூடப் பங்கேற்காததால், சட்டரீதியாக சபையைக் கூட்ட முடியாது என்று சம்பள நிர்ணய சபையின் தலைவர் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர தெரிவித்தார்.

சபையில் பங்கேற்ற 8 தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் 3 அரசாங்க நியமன உறுப்பினர்கள் முன்னிலையில், இலங்கை செங்கொடி சங்கத்தின் ஆலோசகர் மேனகா கந்தசாமி அடிப்படைச் சம்பளத்தை தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கேற்ப ரூபாய் 2,000 ஆக அதிகரிக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். எனினும், சட்டரீதியான கோரம் (Quorum) இன்மையால் குறித்த யோசனை தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை.

கம்பனிகள் தன்னிச்சையாகச் செயற்பட்டமைக்குத் தொழில் ஆணையாளரும் பிரதிநிதிகளும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தைகள் நிறைவு செய்யப்பட்டு, நவம்பர் 20 ஆம் திகதிக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை தொழில் அமைச்சர் அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தொழிற்சங்கங்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இறுதியில், மறு திகதி அறிவிக்கப்படாமலேயே சம்பள நிர்ணய சபை ஒத்திவைக்கப்பட்டது

Exit mobile version