அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை தற்போது இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு முக்கிய இடமாக மாறியுள்ள நிலையில், அவர்களின் வருகை முன்னெப்போதையும் விடக் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தச் சூழலைச் சுட்டிக்காட்டிய அவர், சர்வதேச ரீதியாக நிலவும் பதற்றங்கள் இலங்கையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கை முஸ்லிம் சமூகம் தற்போதைய பூகோள அரசியல் (Global Politics) மாற்றங்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து மிகவும் தெளிவாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இலங்கையில் இஸ்லாத்தையோ அல்லது குரானையோ தடை செய்யப்போவதில்லை என்றும், அவ்வாறு செய்ய முடியாது என்றும் தெரிவித்த அவர், பாதுகாப்புக் காரணங்களுக்காக விழிப்புணர்வு அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
பூகோள அரசியலின் சிக்கல்களைச் சரியாகப் புரிந்துகொண்டு, நாட்டில் மீண்டும் ஒரு அசம்பாவிதம் ஏற்படாதவாறு தற்காப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.