மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப் பின்னடைவைச் சமாளிக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டிக்காக்கும் நோக்கில், அரச ஊழியர்களின் சம்பளக் குறைப்பு முதல் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணத் தடை வரை பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளின் கீழ், தன்னாட்சி அதிகாரமுடைய நிறுவனங்கள் உள்ளிட்ட அரச நிறுவன ஊழியர்களின் சம்பளம் 5% முதல் 30% வரை குறைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஆகியோரின் அடுத்த இரண்டு மாதங்களுக்கான முழுச் சம்பளமும், பொது நல நிதிக்கு (Public Welfare Fund) வழங்கப்படவுள்ளது. மேலும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அரசு வாகனங்களின் ஒதுக்கீடு 50% ஆகக் குறைக்கப்பட்டுள்ளதோடு, அடுத்த இரண்டு மாதங்களுக்கு 60% அரசு வாகனங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டுப் பயணங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, தவிர்க்க முடியாத பயணங்கள் எனில் அவர்கள் ‘எகனமி’ (Economy Class) வகுப்பிலேயே பயணிக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எரிபொருளைச் சேமிக்க ஏற்கனவே வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வால் பாகிஸ்தான் சந்தித்து வரும் இந்த நெருக்கடியின் போது, இந்தச் சிக்கன நடவடிக்கைகளின் மூலம் சேமிக்கப்படும் நிதி அனைத்தும் பொதுமக்களின் நிவாரணப் பணிகளுக்காக மட்டுமே செலவிடப்படும் எனப் பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவும் மோதல்கள், பாகிஸ்தானின் எரிபொருள் இறக்குமதிச் செலவை அதிகரித்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில், அரசாங்கம் முன்வைத்துள்ள இந்தத் தியாகங்கள் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு எந்தளவு உதவும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.