யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரன் மூர்த்தி, சாந்தை கிராமத்தில் பல குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைகள் குறித்துக் கேள்வி எழுப்பினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மலசலக்கூட வசதிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்குப் பதிலளித்த துறைசார் அதிகாரிகள், யாழ். மாவட்ட புள்ளிவிபரங்களின்படி, மாவட்டம் முழுவதும் மொத்தம் 3,012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதிகள் கிடையாது. அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாததால் இந்தக் குடும்பங்கள் பாரிய சுகாதாரச் சீர்கேடுகளை எதிர்கொண்டு வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
மாவட்டத்தின் சுகாதார நிலைமையை மேம்படுத்தவும், இந்த அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யவும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

