எங்களை உடனடியாக விடுவியுங்கள்! – CEB ஊழியர்கள் அதிரடி.

electricity board

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, விருப்ப ஓய்வுத் திட்டத்தின் (VRS) கீழ் வெளியேற விண்ணப்பித்த 2,200க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தங்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகத் தாம் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக உடனடி தலையீட்டை கோரி வலுசக்தி அமைச்சருக்கு அவர்கள் இன்று (10) அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டம் மற்றும் 2025ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய, மின்சார சபையை கலைத்துவிட்டு அதற்குப் பதிலாக உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக புதிய நிறுவனங்களை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இதன்கீழ், புதிய நிறுவனங்களில் இணைய விரும்பாத ஊழியர்களுக்காக கடந்த 2025 ஓகஸ்ட் 26ஆம் திகதி விருப்ப ஓய்வுத் திட்டம் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சுமார் 2,200 ஊழியர்கள் 2025 அக்டோபர் 27ஆம் திகதிக்குள் சட்டப்படியாக ஓய்வுபெற விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், மின்சார சபை நிர்வாகம் அவர்களை விடுவிக்க மறுப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், தனியார் துறை நியமனங்கள் மற்றும் சுயதொழில் முயற்சிகளைத் தொடர முடியாமல் பல ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்புக்கான ‘நியமிக்கப்பட்ட திகதி’ இதுவரை வர்த்தமானியில் அறிவிக்கப்படாமையே இந்தத் தாமதத்திற்கு முக்கிய காரணமாகும். முன்னதாக ஜனவரி 1 மற்றும் பெப்ரவரி 1 ஆகிய திகதிகள் உத்தேசிக்கப்பட்டிருந்தாலும், அவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாததால் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

மேலும், மின்சக்தி துறை மறுசீரமைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகவுள்ளமை இந்தச் செயல்முறையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

இந்நிலையில், தமக்கான நட்டஈடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, ஆனால் உடனடியாகத் தங்களை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் எனவும், பெப்ரவரி 1ஆம் திகதிக்குள் உரிய வர்த்தமானியை வெளியிடுமாறும் ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விருப்பமில்லாத ஊழியர்களைக் கட்டாயப்படுத்திப் பணியில் வைத்திருப்பது நிறுவனத்தின் உற்பத்தித்திறனைப் பாதிக்கும் என்றும் அவர்கள் அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் எச்சரித்துள்ளனர்.

 

 

Exit mobile version