இலங்கையில் பணிபுரியும் மக்களில் கணிசமானோர், குறிப்பாக உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் உள்ளவர்கள், செயற்கை நுண்ணறிவின் (Generative AI) வளர்ச்சியால் தங்களது வேலைகளை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகப் புதிய ஆய்வொன்று எச்சரித்துள்ளது.
கொள்கை ஆய்வுகள் நிறுவனம் (Institute of Policy Studies – IPS) அண்மையில் நடத்திய ஆய்வின்படி, சுமார் 1.83 மில்லியன் இலங்கைத் தொழிலாளர்கள் AI தொழில்நுட்பத்தால் நேரடியாகப் பாதிக்கப்படக்கூடிய துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இது நாட்டின் மொத்த வேலை செய்யும் மக்கள் தொகையில் தோராயமாக 22.8 சதவீதம் ஆகும். GenAI எனப்படும் ஆக்கபூர்வமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், மனிதர்கள் செய்யும் பல பணிகளைத் தானியங்கி மயமாக்குவதால், இவர்களின் வேலை பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
குறிப்பாகத் தரவு உள்ளீடு (Data Entry), நிருவாகப் பணிகள், வாடிக்கையாளர் சேவை (Customer Service) மற்றும் சில ஆரம்பநிலைத் தொழில்நுட்பப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த அச்சுறுத்தல் மிக அதிகமாக இருப்பதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
AI தொழில்நுட்பம் ஒருபுறம் அச்சுறுத்தலாக இருந்தாலும், மறுபுறம் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். எனவே, இலங்கைத் தொழிலாளர்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்பத் தங்களை மறுதிறன் (Reskilling) செய்து கொள்வதும், டிஜிட்டல் கல்வியறிவை வளர்த்துக் கொள்வதும் காலத்தின் கட்டாயம் என IPS நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.