மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போது கட்டணங்களை அதிகரித்து மக்கள் ஆணையைத் துஷ்பிரயோகம் செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாகச் சாடியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் இன்று விடுத்துள்ள விசேட அறிக்கையில், தேர்தல் மேடைகளில் மின்சாரக் கட்டணங்களை 33% ஆல் குறைப்போம் என முழங்கியவர்கள், இன்று 11.57% ஆல் கட்டணத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
9,000 ரூபா கட்டணத்தை 6,000 ரூபாவாகக் குறைப்பார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு, தற்போது ஏழ்மையான வாழ்க்கையையே அரசாங்கம் பரிசாக அளித்து வருகிறது. ஐ.எம்.எப் நிபந்தனைகளை மக்களுக்குச் சாதகமாக மாற்றுவோம் என்று கூறிவிட்டு, தற்போது அந்த நிபந்தனைகளை அப்படியே அமுல்படுத்தி மக்கள் மீது சுமையை ஏற்றி வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
மின்சார நுகர்வோருக்கு வழங்கிய எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி, அவர்களை உதவியற்ற நிலைக்குத் தள்ளியதன் மூலம் அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகச் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
‘டித்வா’ சூறாவளியினால் இலட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வேளையில், அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவசர அவசரமாக மின்கட்டணத்தை உயர்த்த முயல்வது மக்கள் விரோதச் செயலாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர்த்து, மேடைகளில் வாக்குறுதி அளித்தபடி 33 சதவீதத்தால் கட்டணங்களைக் குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், அரசாங்கத்தின் இத்தகைய மக்கள் விரோதப் போக்குகளுக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

