பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட அகரம்மேல் ஊராட்சியில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் மூக்குத்திக்குளத்தை மணலால் மூடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மூக்குத்தி குளத்தை காணவில்லை என்று அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை மீட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமைச்சர் சா.மு.நாசர், பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி ஆகியோரிடம் அகரம் மேல் கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுபற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அமைச்சர் சா.மு. நாசர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி, வட்டாரவளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் மூக்குத்தி குளம் இருந்த இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது குளம் முழுவதும் மணல் நிரப்பி மூடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து 2 ஜே.சி. பி. எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு குளத்தில் கொட்டப்பட்டு இருந்து மணலை அகற்றினர். தொடர்ந்து மூடப்பட்ட குளம் தோண்டப்பட்டு வருகிறது.
மர்ம கும்பலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளத்தின் பகுதி முழுவதும் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 5 கோடி ஆகும்.
மூக்குத்தி குளத்தை முழுமையாக தோண்டி, தூர்வாரி தண்ணீர் சேமிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
#WorldNews