பதுளை, ஹிந்தகொட பகுதியில் உள்ள வீடொன்றின் பக்கவாட்டுச் சுவர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (20) மாலை 4:30 மணியளவில் பதுளை, களு டேங்க் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பக்கவாட்டுச் சுவர் (Retaining Wall) அமைப்பதற்காகக் குழி தோண்டப்பட்டிருந்த நிலையில், திடீரென மேலிருந்து மண் சரிந்து விழுந்துள்ளது. இதன்போது அங்கு பணியில் இருந்த இரண்டு தொழிலாளர்கள் மண் குவியலுக்குள் சிக்கிக் கொண்டனர்.
ஹாலி எல, அந்துடவாவல பகுதியைச் சேர்ந்த சந்திர பால பண்டார (55) என்பவர் இந்த விபத்தில் உயிரிழந்தார். மற்றுமொரு தொழிலாளி காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த தகவலறிந்ததும் இராணுவம், பொலிஸார், பதுளை மாநகர சபை தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். ‘சுவ செரிய’ (1990) அம்பியூலன்ஸ் ஊழியர்கள் மற்றும் பதுளை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவினர் சம்பவ இடத்திலேயே முதலுதவிகளை வழங்கினர்.
இருவரும் ஒப்பந்ததாரர் ஒருவரின் கீழ் பணியாற்றி வந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாகப் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.