யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் புதிய மனிதப் புதைகுழிகள் இருப்பதாகக் கருதப்படும் இடங்களில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகக் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) அறிவித்துள்ளது.
மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுச் சிறையிலுள்ள லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஸ வழங்கிய இரகசியத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சிறைச்சாலைக்குச் சென்ற OMP அதிகாரிகள், சோமரத்ன ராஜபக்ஸவிடம் அவர் தாக்கல் செய்துள்ள சத்தியக் கடதாசி மற்றும் மேலதிக விபரங்கள் குறித்து நீண்ட விசாரணை நடத்தினர்.
காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுலந்த இது குறித்துக் கூறுகையில்,
புதைக்கப்பட்ட இடங்களைக் கண்டறிய நவீன ரக ரேடார் ஸ்கேனர்கள் (GPR – Ground Penetrating Radar) பயன்படுத்தப்படும். விசாரணையில் கிடைத்த தகவல்கள் நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, உரிய நீதிமன்ற உத்தரவு பெறப்பட்ட பின்னரே அகழ்வுகள் தொடங்கும்.
தகவல்களைத் தருவதற்குப் பதிலாகத் தன்னை விடுதலை செய்யப் பரிந்துரைக்குமாறு சோமரத்ன ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மகேஸ் கட்டுலந்த தெளிவுபடுத்தியவை:
ஒரு கைதியை விடுதலை செய்யப் பரிந்துரைக்கும் அதிகாரம் OMP-க்குக் கிடையாது.
கிருஷாந்தி படுகொலை போன்ற கொடூரக் குற்றத்தில் தண்டனை பெற்ற ஒருவரின் விடுதலையைப் பரிந்துரைக்கும் எண்ணம் அலுவலகத்திற்கு இல்லை.
சோமரத்ன ராஜபக்ஸவின் மனைவி வெளியிடும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அவர் அவற்றை மறுத்துள்ளார்.