காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) மூலம் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்யும் இந்த ஆண்டுக்கான (2026) கள விசாரணைகள் இன்று கிளிநொச்சியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி மகேஸ் கட்டுலந்த தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கிளிநொச்சி பிராந்திய அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த முறைப்பாடுகளில், முதல் கட்டமாக இன்று 112 முறைப்பாடுகள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் (District Secretariat) இந்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. நேற்றைய தினம் (22) வவுனியாவில் நீதியமைச்சரின் தலைமையில், விசாரணைகளை மேற்கொள்ளும் அலுவலர்களுக்கான விசேட செயலமர்வு ஒன்று நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாகவே இன்று கிளிநொச்சியில் நேரடி விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
காணாமல்போனோர் தொடர்பில் தங்களுக்குக் கிடைத்துள்ள சாட்சியங்கள் மற்றும் தகவல்களை உறவினர்கள் இதன்போது விசாரணை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து வருகின்றனர். நீண்டகாலமாகத் தீர்வுக்காகக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.