நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டம் 2-இல் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், மாணவர் ஒருவருக்கு விடுகைப் பத்திரம் (Leaving Certificate) வழங்கத் தன்னிச்சையாக மறுப்புத் தெரிவித்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தனது பிள்ளைகளை ஒரே பாடசாலையில் கல்வி கற்க வைக்க வேண்டும் என்ற நோக்கிலும், பொருளாதாரக் காரணங்களுக்காகவும் சம்பந்தப்பட்ட தாய் தனது பிள்ளையை வேறொரு பாடசாலைக்கு மாற்ற விரும்பியுள்ளார்.
அதே வகுப்பில் பயின்ற ஏனைய மாணவர்களுக்கு விடுகைப் பத்திரம் வழங்கிய அதிபர், இந்தப் பிள்ளைக்கு மட்டும் பல்வேறு காரணங்களைக் கூறி பல மாதங்களாகப் பத்திரத்தை வழங்க மறுத்துள்ளார்.
இது குறித்து கல்வி அதிகாரிகளிடம் அந்தத் தாய் முறையிட்டும், அவர்கள் அதிபருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவோ அல்லது தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவோ முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.
தொடர் அலைக்கழிப்பு மற்றும் மன உளைச்சலுக்கு ஆளான தாய், இறுதியாக மாவட்டத்தின் மனித உரிமை ஸ்தாபனத்தின் அதிகாரியைத் தொடர்பு கொண்டு முறையிட்டுள்ளார்.
விடயத்தை ஆராய்ந்த மனித உரிமை அதிகாரி, உடனடியாக அந்தப் பாடசாலை அதிபரைத் தொடர்பு கொண்டு, ஒரு பெற்றோருக்குத் தனது பிள்ளையை விருப்பமான பாடசாலையில் அனுமதிக்கும் அடிப்படை உரிமை உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், எவ்வித தடையுமின்றி உடனடியாக அந்த மாணவருக்கு விடுகைப் பத்திரத்தை வழங்குமாறு அதிபருக்குக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
ஒரு சில அதிபர்களின் இத்தகைய “அடாவடித்தனமான” மற்றும் அதிகாரத் தோரணையிலான செயல்பாடுகள் ஒட்டுமொத்த ஆசிரியர் மற்றும் அதிபர் சமூகத்திற்கே இழுக்கை ஏற்படுத்துவதாகக் கல்வியாளர்கள் விமர்சிக்கின்றனர். கல்வி அதிகாரிகளின் மெத்தனப் போக்கும் இத்தகைய சம்பவங்கள் தொடரக் காரணமாக அமைவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.