மலையகத்தின் வசந்தபுரி என அழைக்கப்படும் நுவரெலியாவில் தற்போது நிலவி வரும் மாறுபட்ட மற்றும் இதமான காலநிலை காரணமாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளது.
நுவரெலியாவில் தற்போது ஒரு நாளைக்குள் மூன்று விதமான வானிலை மாற்றங்களை அவதானிக்க முடிகிறது:
புற்கள் மற்றும் மலர்கள் மீது மெல்லிய உறைபனி (Frost) படர்ந்து காணப்படுகிறது. இதமான சூரிய வெப்பத்துடன் கூடிய ஒளிமயமான காலநிலை நிலவுவதோடு மலை முகடுகளைத் தழுவிச் செல்லும் அடர்த்தியான பனிமூட்டம் (Mist) நகரை அலங்கரிக்கிறது.
வார இறுதி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நுவரெலியா நகர் எங்கும் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. குறிப்பாக விக்டோரியா தாவரவியல் பூங்கா, கிரகரி வாவி (Gregory Lake) படகுச் சவாரி மற்றும் குதிரையேற்றம் போன்றவற்றில் பயணிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
நுவரெலியாவின் பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரதான தபால் அலுவலகத்தைப் பார்வையிடவும் புகைப்படம் எடுக்கவும் வெளிநாட்டுப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் இந்த அதீத வருகையினால் நுவரெலியாவிலுள்ள விடுதிகள், உணவகங்கள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை முதலே நுவரெலியா – பதுளை பிரதான வீதியூடாக நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.