புத்தளம், நுரைச்சோலை காவல்நிலைய பொறுப்பதிகாரி, அந்தப் பகுதியில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
போதைப்பொருள் விற்பனைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பொறுப்பதிகாரி தொலைபேசியூடாகக் கலந்துரையாடும் ஒலிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அதேபோன்று, மற்றுமொரு போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, குறித்த காவல்நிலைய பொறுப்பதிகாரி உதவிகள் கோரும் ஒலிப்பதிவுகளும் பகிரப்படுகின்றன.
இந்த விடயம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியூதின் நேற்று பாராளுமன்றத்தில் தகவல்களை முன்வைத்தார்.
இதற்குப் பதிலளித்த பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு ரிஷாட் பதியூதினைக் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், காவல்நிலைய பொறுப்பதிகாரி மீதான இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகக் காவல்துறையின் பேச்சாளரிடம் வினவியபோது, அவர் பின்வரும் தகவலைத் தெரிவித்தார்:
“குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறை மாஅதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்தச் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.”