சிட்னி போண்டி (Bondi) கடற்கரையில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநில அரசு பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக அமல்படுத்தியுள்ளது.
ஒரு நபர் வைத்திருக்கக்கூடிய துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக நான்காகக் குறைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி உரிமங்கள் இனி ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் புதுப்பிக்கப்பட வேண்டும். போராட்டங்களின் போது போராட்டக்காரர்கள் தங்களது முகத்தை மறைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையில் போராட்டங்களை நடத்துவதைத் தடுக்க பொலிஸாருக்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை யூத அமைப்புகள் வரவேற்றுள்ளன. வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலான கட்டுப்பாடுகள் மதச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் என அவை தெரிவித்துள்ளன.
இருப்பினும், இச்சட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் துப்பாக்கி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். முகத்தை மறைக்கத் தடை விதிப்பது மற்றும் போராட்டக் கட்டுப்பாடுகள் போன்றவை கருத்துச் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் நசுக்கும் செயல் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

