தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமாரவை அவதூறாகச் சித்தரித்ததாகக் கூறி, இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனங்களான பவர் ஹவுஸ் லிமிடெட் (TV Derana) மற்றும் ஆசியா பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (Hiru TV) ஆகியவற்றுக்கு தலா 1.5 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி சட்ட ரீதியான கடிதம் (Enjoining Notice) அனுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரின் சட்டத்தரணி சம்பத் யலேவத்த மூலம் அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், 2025 டிசம்பர் 16 ஆம் திகதி ஒளிபரப்பான செய்திகளில், கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலம் நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமானது அல்லது அவருடன் தொடர்புடையது என இரு ஊடகங்களும் சித்தரித்துள்ளன.
டிசம்பர் 17 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வெளியிட்ட, “கஞ்சா செடிகள் ஷாந்த பத்மகுமாருக்குச் சொந்தமான நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன” என்ற கருத்தை எவ்வித சரிபார்ப்புமின்றி TV Derana ஒளிபரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த ஒளிபரப்புகள் திட்டமிட்டு தனது அரசியல் புகழுக்கும் கௌரவத்திற்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கில் அமைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தலா 1.5 பில்லியன் ரூபா (மொத்தம் 3 பில்லியன் ரூபா) இழப்பீட்டுத் தொகையை ஏழு நாட்களுக்குள் வழங்காவிட்டால், எவ்வித மேலதிக அறிவிப்புமின்றி இரு நிறுவனங்களுக்கும் எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தக் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

