தேசிய மக்கள் சக்தியின் (NPP) இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார மற்றும் அவரது குழுவினர் தம்மீது தாக்குதல் நடத்தியதாகச் சூரியகந்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த 20-ஆம் திகதி இரவு கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. காயமடைந்ததாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது எம்பிலிப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 16-ஆம் திகதி சூரியகந்த, புலுதொட்ட பகுதியில் மரவள்ளி மற்றும் சோளப் பயிர்ச்செய்கைக்கு மத்தியில் வளர்க்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளுடன் 24 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் 3,000 ரூபா அபராதம் விதித்தது.
குறித்த கஞ்சா செடிகள் மீட்கப்பட்ட காணி, பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவின் மனைவியின் தந்தைக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது. இக்காணி பயிர்ச்செய்கைக்காகவே அந்த இளைஞருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்தச் சுற்றிவளைப்பில் பங்கேற்ற காரணத்தினால், வாகனத்தில் வந்த பாராளுமன்ற உறுப்பினரும் குழுவினரும் “உன்னைக் கொல்வேன்” என மிரட்டித் தம்மீது தாக்குதல் நடத்தியதாகப் பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராகப் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய பொலிஸ் தரப்புக்கும், மக்கள் பிரதிநிதிக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் மற்றும் கஞ்சா பயிர்ச்செய்கை விவகாரம் இரத்தினபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.