ஜப்பான் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அது மனிதகுலத்திற்கே பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்றும், அதனை எந்த விலை கொடுத்தாவது தடுக்கப் போவதாகவும் வடகொரியா எச்சரித்துள்ளது.
ஜப்பான் பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், “டோக்கியோ அணு ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும்” என அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். ஜப்பானின் நீண்டகால அணு ஆயுதமற்ற கொள்கைகளை (Non-nuclear principles) மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற இந்த முன்மொழிவு ஆசியப் பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வடகொரிய வெளியுறவு அமைச்சின் கீழ் உள்ள ஜப்பான் ஆய்வுகள் நிறுவனத்தின் பணிப்பாளர், ஜப்பான் அணு ஆயுதங்களை வாங்கினால் அல்லது தயாரித்தால், ஆசிய நாடுகள் ஒரு பயங்கரமான அணுசக்திப் போரைச் சந்திக்கும். இது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் மீள முடியாத பேரழிவை உண்டாக்கும்.
அணு ஆயுதமற்ற கொள்கையை மாற்ற முயல்வதன் மூலம், ஜப்பான் தனது அணு ஆயுத ஆசையை வெளிப்படையாகக் காட்டியுள்ளது.
இத்தகைய முயற்சியை வடகொரியா ஒருபோதும் அனுமதிக்காது எனவும், அதனைத் தடுக்கத் தீவிரமான நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஜப்பானின் இந்த நகர்வும் அதற்கு வடகொரியாவின் எதிர்வினையும் சர்வதேச அளவில் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளன.