தாமரை மலரும்.. தமிழ்நாடும் வளரும்! முழக்கமிட்ட நடிகை நமிதா

24 660d20c8bb8e7

தாமரை மலரும்.. தமிழ்நாடும் வளரும்! முழக்கமிட்ட நடிகை நமிதா

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வடசென்னை பாஜக வேட்பாளர் பால்கனகராஜை ஆதரித்து நடிகை நமிதா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

வரும் மக்களவை தேர்தலில் வடசென்னை தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இங்கு, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, திமுக சார்பில் சிட்டிங் எம்பியாக உள்ள கலாநிதி வீராசாமி, பாஜக சார்பில் பால் கனகராஜ் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அமுதினி வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.

பாஜக வேட்பாளரை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த தொகுதியில் திமுக 11 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக 1 முறையும் வென்றுள்ளன. இதனால், கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், வடசென்னை பாஜக வேட்பாளர் பால்கனகராஜை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் நடிகை நமிதா ஈடுபட்டுள்ளார்.

அப்போது பேசிய அவர், “மீனவர்களுக்காக ரூ.39000 கோடியை பாஜக கொடுத்துள்ளது. எல்லோருக்கும் வீடுகள், பாத்ரூம் வசதி கட்டி கொடுத்திருக்கிறார்கள். நம் வேட்பாளர் பால்கனகராஜ் நன்றாக படித்தவர், சட்டம் தெரிந்தவர், வார்டு கவுன்சிலர் சங்கத்தில் 4 முறை தலைவராக இருந்தவர், ஏழை மக்களுக்காக உதவி செய்தவர்.

நீங்கள் தைரியமாக நம்பி பால் கனகராஜிற்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். உங்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பாக இருப்பார். தாமரை மலரும், தமிழ்நாடும் வளரும், ஜெயஹிந்த்” என்றார்.

Exit mobile version