வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு நடவடிக்கை ரஷ்ய ஜனாதிபதி புதின் மீது எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ், வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ கடந்த சனிக்கிழமை அவரது மாளிகையிலேயே வைத்து அமெரிக்கப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். இது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரோவின் கைதை வரவேற்ற உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, “ஒரு சர்வாதிகாரி இப்படித்தான் நடத்தப்பட வேண்டும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது அமெரிக்காவுக்குத் தெரியும்” எனப் புதினைக் குறிவைத்து மறைமுகமாகத் தெரிவித்திருந்தார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “புதினைக் கைது செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவருக்கும் எனக்கும் எப்போதும் ஒரு சிறந்த உறவு இருந்து வருகிறது.”
ரஷ்யா – உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராதது தனக்கு ஏமாற்றமளிப்பதாகக் கூறிய அவர், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 31,000 பேர் (பெரும்பாலும் ரஷ்ய வீரர்கள்) உயிரிழந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
போரினால் ரஷ்யப் பொருளாதாரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், இந்தப் போரை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக மீண்டும் உறுதியளித்தார்.
மதுரோவின் கைது மூலம் தனது பலத்தைக் காட்டிய அமெரிக்கா, அணு ஆயுத பலம் கொண்ட ரஷ்யாவுடன் அதே அணுகுமுறையைக் கையாளாது என்பதை ட்ரம்பின் இந்தப் பதில் உறுதிப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், உக்ரைன் போரை நிறுத்துவதே தனது முதன்மை இலக்கு என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

