பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தார். அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உட்படப் பல மொழிகளில் 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்த இவர், அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர்.
கவுஹாத்தி அருகே கர்க்கின் உடல் கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 23) அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட நிலையில், அவரது மரணம் விபத்து தானா என்பது குறித்துச் சந்தேகங்கள் எழுந்து வந்தன.
சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியும், இசைக்குழு உறுப்பினருமான சேகர் ஜோதி கோஸ்வாமி, நன்கு நீச்சல் தெரிந்த ஜூபின் கார்க் நீரில் மூழ்கி இறந்தது சாத்தியமில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, ஜூபின் கார்க் மரண வழக்கை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி எம். பி. குப்தா தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அசாம் முதல்வர் ஹிமந்த பிச்வவா சர்மா அமைத்திருந்தார்.
ஜூபின் கார்க் இசைக்குழுவை சேர்ந்த டிரம்மர், அவரது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மற்றும் நெருங்கிய உறவினரான சந்தீபன் கார்க்கை அசாம் காவல்துறை கைது செய்து விசாரித்து வந்தது. ஜூபின் இசை நிகழ்ச்சியை நடத்தச் சிங்கப்பூர் சென்றபோது சந்தீபன் அவருடன் இருந்ததுடன், அவர் உயிரிழந்த சமயத்திலும் சந்தீபனும் இருந்ததாகக் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், ஜூபின் கார்க் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை எனச் சிங்கப்பூர் காவல்துறை (SPF) அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“ஜூபின் கார்க் அவர்களின் மரணச் சூழல் குறித்து இணையத்தில் பரவி வரும் ஊகங்கள் மற்றும் தவறான தகவல்கள் குறித்துச் சிங்கப்பூர் காவல் படைக்கு (SPF) தெரியவந்துள்ளது. கார்க் மரண வழக்கு தற்போது சிங்கப்பூர் காவல்துறையின் விசாரணையில் உள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணையின் அடிப்படையில், அவரது மரணத்தில் எந்தவிதமான சந்தேகப்படும்படியான சதி எதுவும் இல்லை என்று காவல்துறை கருதுகிறது. காவல்துறையின் முழுமையான விசாரணை முடிய மேலும் மூன்று மாதங்கள் வரை ஆகலாம். விசாரணை முடிந்ததும், அதன் முடிவுகள் பொதுவெளியில் வெளியிடப்படும்.”