இலங்கையில் நிபா (Nipah) வைரஸ் பரவும் அபாயம் தற்போது மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர், விசேட மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்துப் பொதுமக்கள் தேவையற்ற பீதி அடைய வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அண்மையில் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் ஒரு சில நிபா வைரஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும், இதற்காகச் சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு உலக சுகாதார நிறுவனம் (WHO) இதுவரை பரிந்துரைக்கவில்லை.
இந்த வைரஸ் பிரதானமாக வெளவால்கள் போன்ற விலங்குகளிடமிருந்தே பரவுகிறது. பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது பொருட்களுடன் மிக நெருங்கிய தொடர்பு ஏற்படும் போது மட்டுமே மனிதர்களுக்கு இது பரவக்கூடும்.
இது இன்புளுவென்சா போன்று காற்றின் மூலம் எளிதில் பரவாது. நீண்ட கால மற்றும் மிக நெருக்கமான தொடர்புகள் மூலம் மட்டுமே மனிதர்களுக்கிடையே பரவும் வாய்ப்புள்ளது.
இலங்கையில் இந்நோயைக் கண்டறியவும் எதிர்கொள்ளவும் போதிய வசதிகள் உள்ளதாக அனில் ஜாசிங்க வலியுறுத்தியுள்ளார். நோயாளிகளை விரைவாகக் கண்டறிய வலுவான நோய் கண்காணிப்பு அமைப்பு (Surveillance System) நடைமுறையில் உள்ளது.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) இந்நோயை உறுதிப்படுத்துவதற்கான நவீன ஆய்வக வசதிகளைக் கொண்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பிராந்திய ரீதியிலான நோய் நிலமைகளைச் சுகாதார அமைச்சு உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம் என்றும், உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் நம்பகமான ஆதாரங்களை மட்டுமே பின்பற்றுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

