தேசிய கல்வி நிறுவனத்தினால் (NIE) தயாரிக்கப்பட்ட 6 ஆம் தர ஆங்கில மொழிப் பாடத்திற்கான கற்றல் தொகுதியில் (Module), பொருத்தமற்ற மற்றும் ஆபாசமான இணையத்தளமொன்றின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பாடப்புத்தகத்தில் உள்ள ஒரு பக்கத்தில் மாணவர்களுக்கான மேலதிக வாசிப்புக்காக வழங்கப்பட்டிருந்த இணையத்தள முகவரி, ஆபாசமான உள்ளடக்கங்களைக் கொண்ட ஒரு தளத்திற்கு இட்டுச் செல்வதாகப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.
இது தொடர்பான ஆரம்பகட்ட ஆய்வுகளில், வழங்கப்பட்ட இணைய முகவரி தவறானது மற்றும் மாணவர்களுக்குப் பொருத்தமற்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த கற்றல் தொகுதியை மாகாண ரீதியாக விநியோகிக்கும் பணிகள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்தத் தவறு தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்டு செய்யப்பட்டதா என்பது குறித்து தேசிய கல்வி நிறுவனம் (NIE) விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் நாளை (31) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்படவுள்ளது.
கல்விப் பொருட்கள் தயாரிப்பில் இவ்வாறான பாரதூரமான தவறுகள் ஏற்படுவது மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இது குறித்துக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

