சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அவசர புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

1c4025e825b9e5cf5fec4832de98f8c41762857214847193 original

கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் (Amoebic Meningoencephalitis) பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழலில், நாளை (நவம்பர் 17) தொடங்கும் சபரிமலை மண்டல, மகரவிளக்கு பருவத்திற்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளைக் கேரள மாநில சுகாதாரத் துறை விதித்துள்ளது.

இந்தியச் செய்திகள் இந்தப் பாதிப்பால் இதுவரை 36 பேர் மரணம் அடைந்துள்ளமையைக் கருத்தில் கொண்டே இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பருவம் நாளை (17)தொடங்கி ஜனவரி மாதம் 20ஆம் திகதி வரை 65 நாட்கள் நடக்கிறது.

இதனை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள்.

அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் போர்டு வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கேரள மாநில சுகாதாரத்துறை பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தேங்கிய நீரில் வாழும் அமீபாவால் மூளை காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதால், ஐயப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும்போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும் என்றும், குளிக்க பயன்படுத்திய துணியை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பக்தர்கள் கண்டிப்பாக கொதிக்க வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும் என்றும், சபரிமலை உள்ளிட்ட இடங்களில் திறந்த வெளிகளில் மலம் கழிக்க தடை இருப்பதால், சுகாதாரமான கழிப்பறைகளை பக்தர்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து சபரிமலைக்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version