அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விரைவாக விசாரணை நடத்துவதற்காக, 150 அதிகாரிகள் கொண்ட புதிய ‘விசாரணை அதிகாரி குழு’ (Investigative Officers Pool) ஒன்றை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உருவாக்கியுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மட்டுமின்றி, நாடாளுமன்றக் கணக்குக் குழு (COPA) மற்றும் பொது நிறுவனங்கள் குழு (COPE) ஆகியவற்றால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் குறித்த முதற்கட்ட விசாரணைகளை மேற்கொள்வதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
தற்போது அமைச்சின் விசாரணைப் பிரிவில் 20 அதிகாரிகள் மட்டுமே இருப்பதால், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் முறைப்பாடுகளையும் கோரிக்கைகளையும் கையாள்வதில் பெரும் சுணக்கம் நிலவியது. இந்தச் சவாலை முறியடிக்க, பல்வேறு அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களில் பணியாற்றும் திறமையான 150 அரச அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டு, இந்தப் புதிய குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பொது நிர்வாக அமைச்சின் விசாரணைப் பிரிவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.
இந்தக் குழுவின் மூலம் இரண்டு முக்கிய நோக்கங்கள் நிறைவேற்றப்படவுள்ளன: முதலாவதாக, ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் முறையான பயிற்சி பெற்ற விசாரணை அதிகாரிகள் குழுவை உறுதி செய்தல். இரண்டாவதாக, வெளி நிறுவனங்களிலிருந்து அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு வரும் முறைப்பாடுகளைக் கையாள்வதற்கு இந்த அதிகாரிகளைப் பயன்படுத்திக் கொள்ளல். இதற்காகத் தெரிவு செய்யப்பட்ட 150 அதிகாரிகளும் தலா 50 பேர் கொண்ட மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, முறையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ், 14 நாட்கள் கொண்ட தீவிர பயிற்சித் திட்டத்தின் முதலாவது குழுவில் பயிற்சி பெற்ற 42 அதிகாரிகளுக்கான சான்றிதழ் வழங்கும் விழா, நாரஹேன்பிட்டியவில் உள்ள ‘நில மெதுரு’ கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பிரதி அமைச்சர் ருவான் சேனாரத்ன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. ஊழலற்ற மற்றும் வெளிப்படையான அரச சேவையை உருவாக்குவதில் இந்த புதிய விசாரணை அதிகாரிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று அரசு நம்புகிறது.