மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த புதிய எரிபொருள் திட்டம்: ஜனாதிபதி தலைமையில் விசேட தீர்மானம்

09 17

இலங்கையில் நிலவும் தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் மீன்பிடித் தொழிலைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய எரிபொருள் முகாமைத்துவத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச இது குறித்த அறிவிப்பை இன்று (18) வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமையவே இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய திட்டத்தின் கீழ், பல நாள் மீன்பிடிக் படகுகளுக்கான எரிபொருள் விநியோகம் மீன்பிடித் துறைமுகங்கள் ஊடாக முறைப்படுத்தப்படும். குறிப்பாக, ‘படகு கண்காணிப்பு அமைப்பு’ (VMS) மூலம் படகுகளின் பயணத் தகவல்கள் மற்றும் இருப்பிடங்கள் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டு, அதற்குத் தேவையான அளவு எரிபொருள் மட்டுமே வழங்கப்படும். இதன்மூலம் எரிபொருள் வீணாவதைத் தவிர்ப்பதுடன், கடத்தல்கள் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கவும் முடியும் என அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமார் 30,000 ஒரு நாள் மற்றும் சிறிய ரக மீன்பிடிப் படகுகளுக்கு, கடற்றொழில் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 100 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்கப்படும். இதன்படி, ஒரு படகுக்கு ஒரு நாளைக்கு 25 லிட்டர் வீதம், 5 நாட்களுக்கு ஒருமுறை (மொத்தம் 125 லிட்டர்) எரிபொருள் வழங்கப்படவுள்ளது. குறிப்பாக நெடுந்தீவு மற்றும் பத்தலங்குண்டுவா போன்ற தூரப் பிரதேசங்களில் உள்ள மீனவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விசேட முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் பண்ணைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்படாமல் இருக்க, அவற்றின் மின்பிறப்பாக்கிகளுக்கு (Generators) தேவையான எரிபொருளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் நேரடி ஒப்பந்தங்களை மேற்கொண்டு பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version